யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. யாழ். பெரியகடை சிவகணேசன் புடைவையகத்தின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும் யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவருமாகிய பேராசிரியர் கி.விசாகரூபன் தலைமையில் நடைபெற்றது.
.
நிகழ்வின் அனுசரணையாளரான கனகசபை அருள்நேசன் மங்கலவிளக்கேற்றினார். ஊர்காவற்றுறை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.தயாபரன் தமிழ் வணக்கம் இசைத்தார். யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்தினி அருளானந்தம் வரவேற்புரையையும் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தொடக்கவுரையையும் ஆற்றினர்.
.
குறள் நீதி என்ற பொருளில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்; ந.விஜயசுந்தரம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் சுழலும் சொற்போர் இடம்பெற்றது.
.
இக்கால உலகிற்கு வள்ளுவம் பெரிதும் வலியுறுத்துவது எது? என்ற பொருளில் இடம்பெற்ற இச்சொற்போரில் ஒழுக்கம் அல்ல கடமையே என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலஷண்முகனும், கடமை அல்ல மனிதாயமே என்ற பொருளில் யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவத் தொழினுட்பவியலாளர் லோ.துஷிகரனும், மனிதாயம் அல்ல உலகியலே என்ற பொருளில் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தனும், உலகியல் அல்ல ஒழுக்கமே என்ற பொருளில் முல்லை.குமிழமுனை மகா வித்தியாலயத் தமிழாசிரியர் க.சந்திரசேகரும் கருத்துரைகளை வழங்கினர்.
.
சிறப்பு நிகழ்வாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் சத்தியப்பிரியா கஜேந்திரனின் நெறியாள்கையில் நீர்வேலி பொன்சக்தி கலாலயா நாட்டியப் பள்ளியினர் வழங்கிய நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது. இதில் நட்டுவாங்கம் : விரிவுரையாளர் சத்தியப்பிரியா கஜேந்திரன், பாட்டு அமிர்தலோஜனன், வயலின் : அ.ஜெயராமன், மிருதங்கம் : விரிவுரையாளர் க.கஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் நீர்ப்பாசனத்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய ந.ஐங்கரன் நன்றியுரை நல்கினார்;
.
. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.