யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த நாவலர்விழா 14.12.2014 பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது. கரிகணன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் சி. ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். சரவணை நாகேஸ்வரி வித்தியாலய ஆசிரியர் ஹேமலதா கண்ணதாசன் தமிழ்த்தெய்வ வணக்கத்தையும் தமிழ்ச்சங்கப் பொருளாளர் விரிவுரையாளர் ச.லலீசன் வரவேற்புரையையும் வழங்கினர்.
நாவலரின் பன்முக ஆளுமை என்ற பொருளில் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் சிறப்புரை ஆற்றினார்.
நாவலர் ஆற்றிய பணிகளுள் காலத்தால் விஞ்சி நிற்கும் பணி.. என்ற பொருளில் பட்டிமண்டபம் இடம்பெற்றது. தமிழ்ச்சங்கச் செயலர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமயப்பணிகளே என்ற பொருளில் ஆசிரியர்களான கு.பாலஷண்முகன், அ.வாசுதேவன் ஆகியோரும் தமிழ்ப் பணிகளே என்ற பொருளில் மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா, முகாமைத்துவ உதவியாளர் ந.ஐங்கரன் ஆகியோரும் வாதங்களை முன்வைத்தனர்.
நிறைவு நிகழ்வாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறையினர் வழங்கிய “ஆறுமுகநாவலர்’ என்ற பொருளில் அமைந்த நாட்டிய நாடகம் இடம்பெற்றது. இதன் நட்டுவாங்கத்தை நடனத்துறைத் தலைவர் கி.அருட்செல்வி மேற்கொண்டார். விரிவுரையாளர் ஹம்சத்வனி சோமசுந்தரக்குருக்கள், அமிர்தசிந்துஜன் ஆகியோர் குரலிசை வழங்கினர். மிருதங்கம் – விரிவுரையாளர் கணபதிப்பிள்ளை கஜன், ஓர்கன் – ரஜீவன். தமிழ்ச்சங்கச் செயலர் இரா.செல்வவடிவேல் நன்றியுரை நல்கினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் இணைந்து தமிழ்ச்சங்கம் அண்மையில் நடத்திய கவிதைப் பட்டறையின்போது கலந்து கொண்டோரிடையே நடத்தப்பட்ட கவிதைப் போட்டிக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது. இப்பரிசுகளை தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன், அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம், புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் ஆகியோர் வழங்கினர்.
தமிழ்ச்சங்கத்திற்காக நாவலர் திருவுருவப்படத்தை வரைந்துதவிய தமிழாசிரியர் ச.சந்திரசேகர் தமிழ்ச்சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பியால் கௌரவிக்கப்பட்டார்