யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் தொடர்பில் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை…..
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது. முதற்சங்கம் தென்மதுரையிலும் இடைச்சங்கம் கபாடபுரத்திலும் கடைச்சங்கம் தற்போதைய மதுரையிலும் இருந்து தமிழ் வளர்த்ததாக வரலாற்றாசிரியர்கள் சுட்டுவர். பாண்டியரைத் தொடர்ந்து சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் முயற்சி யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாண அரசர்கள் (ஆரியச் சக்கரவர்த்திகள்) எம்மண்ணை ஆண்ட காலத்தில் நல்லூரில் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்ததாகக் கூறுவர். காப்பியம் புனையும் வல்லமை பெற்ற அரசகேசரி முதலான வல்லோர்கள் அங்கம் வகித்த அச்சங்கம் யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியுடன் வலுவிழந்து போயிற்று. 1901 ஆம் ஆண்டில் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் புத்துருவாக்கப்பெற்றது. த.கைலாசபிள்ளையை முதன்மையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கத்தில் கொக்குவில் சி.சபாரத்தினமுதலியார், சுன்னாகம் அகுமாரசுவாமிப்புலவர், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை,வட்டுக்கோட்டை ஆறுமுக உபாத்தியாயர், ஊரெழு சு.சரவணமுத்துப் புலவர்,நல்லூர் வே.கனகசபாபதி ஐயர் முதலியோர் அங்கம் வகித்தனர். காலமாற்றத்தில் இச்சங்கமும் வலுவிழந்து போயிற்று.
இருபத்தோராம் நூற்றாண்டைக் கண்டு,அறிவியல் தமிழை நான்காவது தமிழாக உள்வாங்கி தமிழணங்கு அழகு பெறும் மகிழ்வில்; யாழ். மண்ணின் தமிழார்வலர்கள் ஆழ்மனதில் வேதனையொன்றைக் கொண்டிருந்தனர். கொழும்பு,கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மலையகம் எனத் தமிழ்ச் சங்கங்கள் அமைந்து தமிழை வணிகப் பண்டமாக்காது தமிழ்த்தொண்டு புரியும் நிலையில் யாழ் மண்ணில் ஒரு தமிழ்ச் சங்கம் இல்லையே என்பதே அவ்வேதனையாகும். தமிழின் தலைமைத்தானமாகக் கொள்ளத்தக்க யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்றின் தேவையை உணர்ந்த தமிழார்வலர்கள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களது இல்லத்தை மையமாகவும் அவரைத் தலைவராகவும் கொண்டு 10.06.2012 இல் ஒரு நூற்றாண்டின்பின் மீண்டும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தை அமைத்தனர். ‘தமிழாய் வாழ்வோம்’ என்பதை மகுடவாக்காகக் கொண்டு செயற்படும் இவ்வமைப்பில் மூன்று வகையாக அங்கத்துவங்கள் வழங்கப்படுகின்றன. ரூபா மூவாயிரம் செலுத்துவதன் ஊடாக ஆயுள் உறுப்புரிமை, ரூபா இருநூற்றைம்பது செலுத்துவதன் ஊடாக வருட உறுப்புரிமை, ரூபா ஐம்பது செலுத்துவதன் ஊடாக மாணவ உறுப்புரிமை என இவை அமைகின்றன. சங்கத்தின் நோக்கங்களாகப் பின்வருவன அமைந்துள்ளன.
- தமிழ் மொழி,தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு என்பனவற்றின் ஆக்கத்துக்காக உழைத்தல்.
- தமிழ் மக்களின் அறநிலையங்களைப் பேணிக் காத்தல்.
- சங்க உறுப்பினர்களின் ஒழுக்க நிலை, கல்வி நிலை என்பன செம்மையுறுவதற்கேற்ற வாய்ப்புக்களை உண்டாக்குதல்.
- கவின் கலைகளின் வளர்ச்சிக்கேற்ற வழிவகைகளைச் செய்தமைத்தல்.
- நிகழ்கால சமுதாய மேம்பாட்டு,மாற்ற,எழுச்சி, வளர்ச்சி அசாத்திய சூழல் ஆகியவற்றுக்கேற்ப தமிழர் சமூகத்திற்கு உதவுதல்.
- இளையோரின் தமிழியற்பற்றை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல். சங்கம் அமைக்கப்பட்ட சில மாதங்களுள் அது தனது முதல் விழாவை பாரதி விழாவாக முன்னெடுத்தது. 11.09.2012 இல் நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் இடம்பெற்ற பாரதி விழா தமிழார்வலர்கள் மத்தியில் தமிழ்ச்சங்கத்திற்கென ஒரு முகவரியைத் தேடிக்கொடுத்தது. முதல் விழாவை முன்னின்று நடாத்திய பேராசிரியர் அ.சண்முகதாஸ் தம்பதியர் அவ்விழாவுடன் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து சென்றுவிடும் சூழல் நேர்ந்தது. தமிழ்ச்சங்கச் செயற்பாடுகளும் சிறுபிள்ளை வேளாண்மைதானோ? எனப் பலரும் பேசிக் கொண்டனர். நையாண்டியும் பண்ணினர்;. இந்நிலைமைக்கான தீர்வுபற்றிச் சிந்தித்த யாழ்ப்பாணத்தின் மூத்த தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒருமனதாக முடிவு செய்து சங்கத்தின் தலைமைப் பொறுப்பை பேராசிரியர். தி.வேல்நம்பியிடம் ஒப்படைத்தனர். பேராசிரியர் தி.வேல்நம்பி யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடாதிபதி. தமிழ்மேல் கொண்ட காதலினால் தனது கணக்கியல் சார்ந்த நிபுணத்துவக் கல்விக்கு மேலதிகமாக தமிழில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றவர்;. இந்தியாவின் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்திடமிருந்து சர்வதேச ரீதியில் சிறந்த பேராசிரியர் என்ற விருதையும் பெற்றவர். இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த செயல்வீரர். சங்கத்தின் செயலாளராக ஆசிரியரும் சொற்பொழிவாளருமாகிய இரா.செல்வவடிவேலும் பொருளாளராக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் தமிழ்த்துறை விரிவுரையாளர் ச.லலீசனும் தெரிவு செய்யப்பட்டனர். செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்,கல்வியியல் பேராசிரியர் மா.சின்னத்தம்பி, யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் ஆகியோர் பெருமனதுடன் உபதலைவர்களாகத் தமிழ்ப்பணியேற்றனர். மருத்துவ ஆய்வுகூடத் தொழினுட்பவியலாளர் லோ.துஷிகரன் உபசெயலாளராகப் பணியேற்றார். இவர்களுடன் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பா.பாலகணேசன், சரவணை நாகேஸ்வரி வித்தியாலய தமிழாசிரியர் கு.பாலஷண்முகன், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா போன்றோர் செயற்படு திறனுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்களாகச் சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாரதி விழா, திருவள்ளுவர் விழா, நாவலர் விழா எனப் பெருமெடுப்பில் சங்கத்தால் விழாக்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் தமிழ்ச்சங்கத்தின்பால் உலகின் கவனம் ஈர்க்கப்பெற்ற நிகழ்வு 2013 இல் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா ஆகும். யாழ். மறைமாவட்டத்தினருடன் இணைந்து தமிழ்ச்சங்கத்தினர் ஓராண்டாக நூற்றாண்டுவிழாவை முன்னெடுத்தனர். புனித பத்திரிசியார் கல்லூரியில் தொடக்க விழா தொடர்ந்து தேசிய கல்வியியற் கல்லூரியில் விழா, நெடுந்தீவில் விழா, ஊர்காவற்றுறையில் விழா என யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழியல் எழுச்சி இவ்விழாக்களால் ஏற்படுத்தப்பட்டது. வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் பெரும் ஆளணி நடுவர்களாகப் பங்கேற்க பல நூற்றுக் கணக்கான மாணவர்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்க நூற்றாண்டு விழாக் கட்டுரை, கவிதை,பேச்சுப் போட்டிகள் மிகச் செப்பமாக இடம்பெற்றன. இதற்கான பரிசளிப்பு விழா ஒரு பட்டமளிப்பு நிகழ்வுக்கு ஒப்பானதாக யாழ். பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நடத்தப்பட்டது. துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் வெற்றியீட்டியவர்களுக்கான விருதுகளை வழங்கிக் கௌரவித்தார். இதே நாளில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு நிறைவு விழாச் சிறப்பு ஆய்வரங்கும் இடம்பெற்றது. இலங்கையின் வெவ்வேறு பாகங்களில் இருந்து வருகை தந்த ஆய்வாளர்கள் தமிழியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இதே வேளை திருமறைக் கலாமன்றத் திறந்த வெளியரங்கில் இடம்பெற்ற மாலைநிகழ்வுகளில் ஆயிரக்கணக்கில் தமிழார்வலர்கள் பங்கேற்றனர். அண்மைக்காலங்களில் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் அதிகளவான தமிழார்வலர்கள் பங்கேற்பதை அவதானிக்க முடிகின்றது. கடந்த ஆண்டின் இறுதியில் கைலாசபதி கலையரங்கில் நடத்தப்பட்ட பாரதி விழாவில் பார்வையாளர்க்ள அமர இடவசதியின்றி நினறு பங்கேற்றமையையும் அண்மையில் கவிதையார்வலர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் பட்டறை நிகழ்வில் பலநூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுப் பயன்பெற்றமையும் இதற்குச் சான்றுகளாகக் கருதிக்கொள்ளலாம். தமிழ்ச்சங்கச் செயற்பாடுகளில் முகாமைத்துவப் பீட மாணவர்களும் ஆசிரிய கலாசாலை மாணவர்களும் அதிகளவில் பங்கேற்கின்றனர் என்ற அவதானிப்பையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தலைவர், பொருளாளர் ஆகியோர் இந்நிறுவனங்கள் சார்ந்த மாணவர்களை ஆற்றுப்படுத்துவோராக இருப்பதால் இம்மாணவர்களின் பங்கேற்பில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஆயினும் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தியே தமிழ்ச்சங்கத்தின் பெரும்பாலான செயற்பாடுகள் மற்றும் விழாக்கள் இடம்பெறுகின்றன என்ற அவதானிப்பையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இது பல்கலைக்கழகத்தையும் தமிழார்வம் மிக்க சமூகத்தையும் இணைக்கும் முன்மாதிரியான செயற்பாடெனக் கருதுவோரும் உள்ளனர். எம்மண் சார்ந்த நிலையில் தமிழும் தமிழ்ச் சமூகமும் பல சவால்களைச் சந்தித்துவரும் நிலையில் அரசியல் நிலையைக் கடந்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பணிகள் காலத்தின் தேவையாகக் கருதப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் முன்னணித் தமிழறிஞர்கள் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருப்பதனாலும் தமிழ்ச்சங்கம் யாழ். பல்கலைக்கழகத்துடன் இலகுவாக இணைப்புப் பெறக்கூடிய அமைப்பாக இருப்பதனாலும் தமிழ், தமிழர் சார்ந்த முக்கிய ஆய்வுகளை முன்னெடுத்துத் தமிழின் எதிர்காலத்தையும் இருப்பையும் உறுதி செய்ய வேண்டிய பெரும்பணி தமிழ்ச்சங்கத்திற்கு உரியது. தமிழின் பெயரால் விழா எடுப்பதற்குப் பலர் உளர். திருவிழாச் சந்தைபோலச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது விழா எடுத்துப் பார்ப்போரும் உள்ளனர். இவர்களது கொள்கைகளையும் முன்னெடுப்புக்களையும் தாண்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கிராமிய மட்டத்தில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும். அண்மையில் பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்த கவிதைப் பட்டறை போன்று கிராமிய மட்டங்களில் பாடசாலை மட்டங்களில் தமிழின் பெருமையை உணர்த்தத்தக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும். சங்கம் தனது செயற்பாடுகளைப் பறைசாற்றும் வகையிலும் தமிழியல் சார்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் வகையிலும் இணையத்தளம் ஒன்றையும் கொண்டிருக்கின்றது. www.thamilsangam.org என்பது இதன் முகவரி ஆகும். காலத்தின் தேவையாய் எம்மண்ணில் எழுந்து ஏற்றங்கண்டுவரும் தமிழ்ச்சங்கம் தமிழாய் வாழ்வோம் என்ற பிரக்ஞையை நம்மவரிடத்தே விதைக்க எமது நல்வாழ்த்துக்கள்.
நன்றி தினக்குரல்