இணையத்தால் எம் தமிழ் வளர்ப்போம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் ஈழத்தமிழரின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் தமிழ் உணர்வும்,தமிழ்ப்பற்றும், தமிழறிவும் வளர்ந்திட வேண்டும் என்று உன்னதமான குறிக்கோளுடன் செயற்படுகிறது.
தமிழ் மொழியின் தொன்மையையும் மேன்மையையும்,பண்பாட்டுச் செழுமையும் இளந்தலைமுறையினர் உயிர்ப்புடன் உணர்ந்து குதூகலிக்கவும் கொண்டாடவும் வழிசமைத்து வருகிறது.தமிழ்மொழியின் இயற்றமிழ்,இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த அறிவுசார் ஆற்றலை சமூக மட்டத்தில் வளர்ப்பது எமது தமிழ்ச்சங்கத்தின் இலக்காகும்.
தாய்மொழியாம் தமிழ்மொழி தமிழர் பண்பாடு என்ற இயங்கும் சக்கரத்தின் மையவிசையாகும். பண்பாட்டை பேணுதற்கு தமிழ் அறிவையும்,தமிழர் உணர்வையும் ஒன்றிணைத்த வகையில் வளர்க்கவேண்டும் என்ற தெளிவான சிந்தனையுடன் எமது சங்கம் செயற்படுகிறது.
தமிழ் நூலகம்,தமிழ் வெளியீடுகள் தமிழ்க்கல்வி, தமிழ் ஆராய்ச்சி,தமிழ் ஆய்வரங்கு போன்ற பல முயற்சிகளில் எமது தமிழ்ச் சங்கம் அக்கறை கொண்டுள்ளது. தமிழறிஞர்களை ஒன்றிணைத்தல், தமிழரின் பெருமை மிக்க விழாக்களை கொண்டாடுதல் என்பவற்றிலும் நாம் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறோம்.
இணையத்தின் வழியாக உலகெங்கும் பரந்து வாழும் எம்மவர் உணர்வுகளை ஒன்றிணைக்க முடியும் என்பது எங்கள் நம்பிக்கை.
எங்கள் தமிழ்ச்சங்கத்துக்கான ஒரு காணி,கட்டிடம் தேவை, அப்போதுதான் தமிழ்ச்சங்கம் கால்பதித்து, தமிழ்க்கலைகள் பலவற்றையும் வளர்க்க முடியும். தேவைகளை உணர்ந்து உதவுபவர்கள் தமிழர்கள். தமிழ் உணர்வை உதவிகளின் வடிவில் வெளிப்படுத்துங்கள். அதற்காக எங்கள் நன்றிகளை நாம் தருவோம்.
“இணையத்தால் எம் தமிழ் வளர்ப்போம்
இணைவதால் ஏற்றங்கள் நாம் பெறுவோம்”
பேராசிரியர் மா. சின்னத்தம்பி
கல்வியியல் பேராசிரியர்
யாழ்ப்பாணப் பலகலைக்கழகம்.
உபதலைவர்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்.