யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்துக்கு நீண்ட ஒரு வரலாறு உண்டு. 1900 களில் உருவாக்கப்பட்ட இச்சங்கம் சிலகாலம் உயிர்த்துடிப்புடன் இயங்கிப் பின்னர் செயலிழந்து போனது. சைவத்துக்கும் தமிழுக்கும் பேர் போன யாழ்ப்பாணத்தில் தமிழை வளர்த்திடத் தமிழ்ச் சங்கம் ஒன்று இல்லாத குறையைத் தமிழார்வலர்கள் பலரும் உணர்ந்து கொண்டதன் பயனாக 2011 இல் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மீண்டும் உயிர்பெற்றெழுந்தது. தமிழ்மொழி தமிழர் பண்பாடு குறித்த நெயற்றிட்டங்களை முன்னெடுத்து அவற்றுக்கீடாகத் தமிழ்மொழியை அதன் பெருமையைää வளமையை தமிழார்வலரிடத்து குறிப்பாக இன்றைய இளந்தலைமுறையினரிடத்துக் கொண்டு போய்ச்சேர்ப்பதென்பது இச்சங்கத்தின் தலையாய நோக்காக உள்ளது.
தொடங்கிய சில ஆண்டுக் காலப்பகுதிக்குள்ளாகவே பாரதிவிழா, வள்ளுவன் விழா, ஆறுமுகநாவலர் விழா முதலான விழாக்களையும் இவ்விழாக்களோடு ஒட்டிய பல்வேறு வகையான தமிழறிவுப் போட்டிகளையும் நடாத்தி தமிழ்ப்பேசும் சமூகத்தினரிடையே தமிழ்ச்சங்கம் தனது இருப்பை உறுதிசெய்துகொண்டுள்து.
தமிழ்ச்சங்கத்தின் மதிப்புயர் பேராசியர் தி. வேல்நம்பி துறைசார் நிபுணத்துவத்துக்கப்பால் நிரம்பிய தமிழறிவு விளங்கப் பெற்றவர். அவருடைய நேரிய வழிகாட்டுதலில் தமிச்சங்கத்தின் உறுப்பினர்கள் சங்கத்தின் நோக்கினை செயற்படுத்திட அயராது பாடுபட்டுவருகின்றார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வர்த்தகப் பெருமக்கள் பலரும் எமது சங்கத்தின் செயற்பாடுகளுக்குத் தம்மாலியன்ற உதவிகளை மனவிருப்புடன் உதவிவருகிறார்கள். தமிழ்சங்கத்தின் ஆதார சுருதியே இவர்கள் தான்.
தமிழ்ச்சங்கத்தின் செயற்பாடுகளை உலகமெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்திட வசதியாக தமிழ்ச்சங்கத்துக்கான தனியான இணையத்தளம் ஒன்றினை இன்றைய பாரதிவிழாவில் (11.12.2013) தமிழ்ச்சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கிறது. தமிழ்ச்சங்கத்தின் பணிகள் தழைத்திட தமிழ் பேசும் மக்கள் இன மத பேதமின்றி பூரண ஒத்துழைப்பபு வழங்க வேண்டும் என வேண்டிநிற்கிறேன்.
பேராசிரியர் சி. விசாகரூபன்
உபதலைவர்-தமிச்சங்கம்
தலைவர்-தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
11.12.2013