யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் எதிர்வரும் (11.12.201) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் அனுசரணையாளர்களான கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் தம்பதியரும் திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனராஸ் தம்பதியரும் மங்கல விளக்கேற்றுவர். யாழ். கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் கௌரி முகுந்தன் தமிழ்த்தெய்வ வணக்கம் இசைப்பார். வரவேற்புரையை இந்துநாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சுகந்தினி ஸ்ரீமுரளிதரனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் வாழ்த்துரையைத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் வழங்குவர்.
தமிழ்ச்சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைத் துணைவேந்தர் தொடக்கி வைப்பார். இதன் அறிமுகவுரையை மருத்துவபீடப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா வழங்குவார். தொடர்ந்து இணையத்தளத்தை வடிவமைத்த தங்கராஜா தவரூபனுக்கான மதிப்பளிப்பு இடம்பெறும்.
பாரதி யார்? என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் சிறப்புரை இராமநாதன் நுண்கலைத்துறையினர் வழங்கும் புதுமைப்பெண்கள் என்ற பொருளில் அமைந்த நாட்டிய நாடகம் யாழ். முன்னணிக் கலைஞர்கள் பல்வகையான பக்கவாத்தியங்களுடன் இணைந்து வழங்கும் நல்லதோர் வீணை என்ற பொருளில் அமைந்த பாரதி பாடல்களால் ஓர் இசை அர்ச்சனை ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி இணைப்பாளர் பா.பாலகணேசன் நன்றியுரை நல்குவார்.