நெடுந்தீவில் சிறப்புற்ற தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்.
உலகத்திசையாவும் தமிழைக் காவிச்சென்று உலக அரங்குகளில் தமிழ் மொழியின் செழுமையை பழைமையை நிலைநிறுத்தி தமிழுக்கு இன்று செம்மொழி அந்தஸ்து கிடைக்க அன்றே உழைத்த தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இவ் வருடம் உலகில் தமிழர்கள் வாழும் பாகங்களில் நினைவேந்தல் செய்யப்படுகின்றது. தமிழ்மொழி சார்ந்த ஆய்வுப்பரப்பில் ஆழ மூழ்கிய ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியது எனினும் அத்தகைய அத்தனை பேரினதும் ஆய்வுவீச்சு இந்தியத்தமிழ் அறிஞர்களையும் மிஞ்சும் அளவுக்கும் அவர்களால் விதந்துரைக்கப்பட்டு வியப்போடு பார்க்கும் அளவுக்கும் ஆழமானது என்பதை எவரும் மறுத்துரைப்பதற்கில்லை. இத்தகைய ஆய்வுப்புல ஆளுமைகளுக்கு நாயகமாக தனித்துவமாக திகழ்பவர் தவத்திரு தனிநாயகம் அடிகள்.
அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட உலகத்தழிராச்சி மாநாடுகள் தமிழ்மொழி சார்ந்து ஏற்படுத்திய துடிப்புக்கள் கனதியானவை. தனித்து ஒரு மொழியின் இலக்கிய வாழ்வை தாண்டி அம் மொழியின் அரசியல்ää அம் மொழி சார்ந்த மக்களின் வாழ்வியல்ää மொழியின் நிலைத்திருப்பு என அத்தனை விடயங்களிலும் அதிக செல்வாக்கைச் செலுத்தியவை தனிநாயகம் அடிகளாரின் தமிழாராய்ச்சி மாநாடுகள்.
இத்தகைய ஆளுமையை மீள ஒரு தடவை ஆராதிக்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்.மறை மாவட்டமும் இணைந்து தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை அர்த்தமிக்க வகையில் நிகழ்த்திவருகின்றனர். மாவட்ட ரீதியாக வடக்கு மாகாணம் முழுமைக்கும் பாடசாலை மாணவர்களுக்கு போட்டிகள்ää ஆய்வு அரங்கங்கள்ää மலர் வெளியீடுகள் எனத் தொடரும் இந் நிகழ்வுகளின் வரிசையில் பிராந்தியங்கள் தோறும் தனிநாயகம் அடிகளின் விழாவைக் கொண்டாடி அடிகளாரின் தன்னலமற்ற தமிழ்ப்பணியை ஆண்டுகள் கடந்தும் கௌரவித்துவருகின்றனர். இந்தகைய அடிப்படையில் அடிகளார் பிறந்த இடமாகிய நெடுந்தீவு மண்ணிலே நிகழ்ந்த விழா இவை அனைத்துக்கும் மகுடம் வைத்த விழாவாக அமைந்திருக்கின்றது.
தீவகக் கல்வி வலயத்தின் முழமையான ஏற்பாட்டில் காலை அமர்வு நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும் நெடுந்தீவு பொது மக்களின் முயற்சியில் மாலை அமர்வு தனிநாயகம் அடிகள் திறந்தவெளி அரங்கிலும் வெகுசிறப்பாக நடந்தேறியிருக்கின்றது. கடற்படையினரின் துணையோடு யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நெடுந்தீவு மண்ணை பாதம் தொட்டதும் நெடுந்தீவு மக்களுக்கே உரித்தான மகத்தான வரவேற்புடன் வரவேற்க்கப்பட்டனர்.
நெடுந்தீவுக்கு வரும் அத்தனை பேரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்கும் முதல் மனிதராக திழ்பவர் தனிநாயகம் அடிகள். ஆம் மாவலித்துறையில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையைத் தரிசிக்காது எவரும் நெடுந்தீவுக்குள் பிரவேசிக்க முடியாது. அவ் உருவச்சிலைக்கு முதலில் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் ஏற்பாடாகியிருந்த காலை அமர்வுக்கு மாணவர்களின் பாண்ட் வாத்திய இசைமுழங்க அழைக்கப்பட்ட விருந்தினர்களும் நெடுந்தீவு பாடசாலைகளின் சமூகமும் தனிநாயகம் அடிகளின் உருவப்படத்தை தாங்கிய ஊர்வலமாகச் சென்று அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தீவகக் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி செயலாளர் இரா.செல்வவடிவேல்ää பொருளாளர் ச.லலீசன் ஆகியோர் உரை நிகழ்த்தி தனிநாயகம் அடிகளின் சிறப்பையும் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதன் மூலமாக அடைய நினைக்கும் இலக்குகளையும் அவைக்கு தெரியப்படுத்தினர்.
மாணவர்களின் கலைநிகழ்வுகள் மிக நேர்த்தியாக காண்போருக்கு கண் செவிசார் சலிப்பைத் தராது படைக்கப்பட்டமைக்கு ஆற்றுகையை செய்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் வழமைபோல பாராட்டு ஒன்றை மட்டுமே இவ்விடத்தில் பதிவுசெய்ய முடிகின்றது. நல்ல விதைகள் எம்மிடம் உண்டு விளைநிலத்தை பண்படுத்தி வழங்க வேண்டிய பொறுப்பு நமக்கானது என்பதை பலருக்கு உணர்த்திய நிகழ்வுகளாக அத்தனை கலைநிகழ்வுகளும் அமைந்திருந்தன. குறிப்பாக மழலை மாறாத தரம் ஒன்று மாணவர்கள் பண்பாட்டுடை தாங்கி அரங்கேற்றிய கவியரங்கம் கடல் கடந்து மீள யாழ்ப்பாணம் திரும்பிய பின்னரும் காதுகளில் ஒலித்த வண்ணமிருந்தது.
நிகழ்விடை அரங்கத் தாமதம்ää நிகழ்வு நீண்டு செல்லல் என வழமையாக எங்கும் இருக்கும் விடயங்களை நெடுந்தீவு மகாவித்தியாலய அரங்கில் காணமுடியாமை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த தீவகக் கல்வி வலயத்தினர் மீதும் நிகழ்வுகளை வழங்கிய பாடசாலைகள் மீதும் கொண்டிருந்த மதிப்புணர்வை மேலும் சற்று உயர்த்தியுள்ளது.
இருப்பினும் சில விடயங்களை சுட்டிக்காட்டுவது எதிர்கால கலை ஆரோக்கியத்துக்கு நன்றாகவிருககும். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் “மீன் மகள் பாடுகின்றாள் வாவி மகள் ஆடுகின்றாள்” என்ற பாடலை அப்படியே தழுவி மெட்டமைக்கப்பட்ட நெடுந்தீவுக்கான பாடல் புதிய கலைப்படைப்பு ஒன்று குறித்து சிந்திப்பதை தடுத்திருப்பது கவலைக்குரியதே. இவ் விடயத்தில் கவனம் எடுத்தல் தனித்தவமான படைப்புக்களுக்கு வழி திறக்கும்.
மாலை நிகழ்;வுகள் அழைப்பிதழ் நேரத்திலிருந்து சற்று தாமதமானாலும் தரமாகவிருந்தன. மறைமாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு மைந்தர் அருட்கலாநிதி அ.பி ஜெயசேகரம் அடிகளார் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி ஜெபநேசன் அடிகளார்ää தமிழ்ச் சங்கத்தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் ஆ.சிறிää நெடுந்தீவு மக்கள் சார்பிலான விழாவை ஒருங்கமைத்த புலவர் அரியநாயகம் தென்னிந்தியச் திருச்சபை போதகர் தாவீது அடிகள் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் உதயன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
ஜெபநேசன் அடிகள் தனக்கும் தனிநாயகம் அடிகளுக்கும் இடையிலான உறவுநிலை அனுபவத்தின் அடிப்படையில் ஆற்றிய உரை பல வரவாற்றுத் தகவல்களை பதிவுசெய்யும் தளமாக அமைந்திருந்தது. அரங்கேற்றப்பட்ட கலைநிகழ்வுகள் பல காலை அமர்வில் பாடசாலை அரங்கில் ஆற்றுகை செய்யப்பட்ட நிகழ்வுகளாக இருந்தமை சற்று சலிப்பைத் தந்தாலும் புதிதாக இணைந்திருந்த பார்வையாளர்களுக்கு விருந்தாகவேயிருந்தது.
நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக அமைந்திருந்த பட்டி மன்றம் இரா.செல்வவடிவேல் தலமையில் குடும்ப பொருளாதாரத்தை பேணுவதில் பெரிதும் முன்னிற்பவர்கள் ஆண்களா?பெண்களா? எனும் தலைப்பில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் ச.லலீசன்ää இ.செந்தூர்ச்செல்வன்ää எஸ்.தயாபரன்ää எஸ்.கருணாகரன்ää லோ.துசிகரன்ää எஸ்.டேவிட்சன் ஆகியோர் கலந்து கொண்டு சபையின் கரகோசங்களையும் உற்சாக ஒலிகளையும் நள்ளிரவை அண்மித்த பொழுதொன்றில் தமதாக்கிக் கொண்டனர்.
நிகழ்வின் நிறைவாக நெடுந்தீவுக் கலைஞர்களால் முத்தா மாணிக்கமா என்ற நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது. நாலாயிரத்தை அண்மித்த சனத்தொகையை கொண்ட நெடுந்தீவு மண்ணில் நள்ளிரவு தாண்டியும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெறும் தரையில் அமர்ந்திருந்து நிகழ்வை ரசித்தமை அம் மக்கள் தனிநாயகம் அடிகளுக்கு அளித்த உளம் சார்ந்த கௌரவமாகும்.
வரட்சியின் கெர்டுமையால் மெதுமெதுவாய் காய்ந்து போகும் நெடுந்தீவு மண்ணில் ஓர் கலைமழை தனிநாயகம் அடிகள் நினைவில் பொழிந்தமை மீளவும் அம் மண்ணை புத்துயிர்க்கச் செய்திருக்கின்றது. அடிகளாரின் நூறாண்டு கடந்த வாழ்க்கை தடத்தை நெடுந்தீவு மண் மீள ஒரு தடவை தன் நினைவேட்டில் எழுதிக்கொண்டது நல்ல மாற்றங்களுக்கு முதற்படியாக அமையட்டும்.
கருத்தும் படங்களும்
திரு.இ.சர்வேஸ்வரா
உதவிப்பதிவாளர்
மருத்துவபீடம்
யாழ்.பல்கலைக்கழகம்