சைவப்புலவர் சு.செல்லத்துரை ஐயா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தியறிந்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆழ்ந்த துயரம் அடைகின்றது. எமது சைவத் தமிழின் செழுமைக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட ஆற்றலாளர் அமரர் அவர்கள். பாரம்பரியக் கல்வி முறைகளுக்குள்ளால் தமிழையும் சைவத்தையும் கற்றுத் தேர்ந்த சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் தான் கற்றுவந்த பாதைகளின் ஊடாகவே தமிழைப் பாதுகாப்பதிலும் பங்களிப்புச் செய்தவர். ஈழமண்ணில் தமிழ் நிலைத்திருப்பதற்கு சைவத்தின் வியாபகம் அவசியமானது எனும் பெரும் உண்மையை உணர்ந்து கொண்ட அவர் தமிழையும் சைவத்தையும் இணைத்துப் பல அறிவுக் காரியங்கள் ஆற்றினார்.
ஈழ மண்ணை சிவபூமி என விளித்த திருமூலர் மீதும் அவர் தந்த திருமந்திரம் மீதும் அளவற்ற பற்றும் ஆழ்ந்த புலமையும் கொண்டிருந்த அவர் தமிழ் மந்திரமாகிய திருமந்திரத்தை அறிவுப் பாரம்பரியத்தினூடாக தலைமுறைக் கையளிப்புச் செய்வதற்கு தன்னாலியன்ற பங்களிப்பை நல்கியவர். தொழில்சார்ந்து ஆசிரியராக அதிபராக கல்வித்துறையில் பணியாற்றிய அவர் நேர்ந்திமிக்க நிர்வாகப் பண்புகளாலும் இளையவர்களை தட்டிக் கொடுத்து அழைத்துச்செல்லும் தலமைத்துவத்தினாலும் தனது கல்வியியல் தலமைகளை அழகுபடுத்தியவர்.
சைவப்புலவர் சங்கத்தின் மூத்த தலைமகனாகவிருந்து பல இளம் சைவப்புலவர்களையும் சைவப்புலவர்களையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியக் கல்வி முறை முற்றுப்பெற்று போய்விடாது தொடர்வதற்கு காலமாற்றத்துக்கு ஏற்ற விதத்தில் தன்னை இசைவுபடுத்தி இக் கல்விமுறையை நிலைத்திருக்க செய்த பெருமனிதர் அவர். அவரது தமிழியல் பங்களிப்புக்கள் பல தளப்பட்டவை. நூலாக்கப்பணிகள், மீள்பதிப்புக்கள், ஆராய்ச்சிகள், மற்றும் அறிவுப்பரவலாக்கம் என நீண்ட அவரது தமிழியல் பணிகள் காலத்தால் என்றும் நினைவுகூரத்தக்கன.
பழகுவதற்கு இனிய பண்பாளனாகவும், நீறணிந்த நெற்றியனாகவும் என்றும் திகழ்ந்த அவர் சைவசிந்தாந்த துறையில் நமது மண்ணில் இருந்த ஆழ்ந்த புலமைமிக்க பாரம்பரிய அறிவுக்குழாத்தின் கடைசித் தலைமுறையின் பிரதிநிதியாகக் கொள்ளத்தக்க தகமையைக் கொண்டிருந்தார். சைவச் சொற்பொழிவுத் துறையிலும் முக்கிய கர்த்தாவாகவிருந்த அவரது குரல்வாண்மையும் குரல்கலாசாரமும் தனித்துவமானது. பௌராணிகர் மரபும், ஓதுவார் மரபும் நலிவுறும் தற்போதைய சூழலில் அத்துறை சார்ந்து இளையவர்களை ஆற்றுப்படுத்திய முன்னுதாரண மனிதர் அவர்.
இத்தகையை காலக்கடமைகளை கச்சிதமாக ஆற்றி நமது சைவத் தமிழின் இருப்புக்கு தக்கவை செய்த தகமையாளர் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் மறைவு அவர் விசுவாசித்த திருமந்திர நாயகர் திருமூலர் அவர்களின் குருபூசைத் தினத்தில் நிகழ்ந்தமை இயற்கை அவருக்கு அளித்த பெரும் தகமைச் சான்றிதழ். அமரரின் பிரிவு தமிழ் உலகில் இடைவெளி தரும் பிரிவு என்பதை உணர்வோம். அமரரது ஆத்மா சாந்திக்கு பிரார்த்திப்பதுடன் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றோம்.
சைவத் தமிழின் செழுமையைப் பேண உழைத்த பெருந்தகை சைவப்புலவர் சு.செல்லத்துரை
Bookmark the permalink.