யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுக்கும் இணையவழிக் கருத்தரங்குகள் எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை வார நாள்களில் இடம்பெறவுள்ளது. இலங்கைத் தமிழும் தமிழரும் என்ற மையப்பொருளில் இடம்பெறும் இக்கருத்தரங்கில் இலங்கைத் தமிழரின் நிலை, இலங்கைத் தமிழ் இலக்கியம், இலங்கையில் தமிழர் கல்வி, இலங்கைத் தமிழ்க்கலைகள், இலங்கைத் தமிழ் ஊடகங்கள் என்ற பொருண்மைகளில் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 27 ஆம் திகதி பேராசிரியர் முனைவர் ப. புஸ்பரட்ணம் ‘கடந்தகாலத் தமிழர் நிலை’ என்ற பொருளிலும் 28 ஆம் திகதி முனைவர் கே.ரி. கணேசலிங்கம் நிகழ்கால மற்றும் எதிர்காலத் தமிழர் நிலை என்ற பொருளிலும் 29 ஆம் திகதி முனைவர் எஸ். சிவலிங்கராஜா – இலங்கை மரபுத் தமிழ் இலக்கியம் என்ற பொருளிலும், 30 ஆம் திகதி முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இலங்கைத் தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு என்ற பொருளிலும் 31 ஆம் திகதி பேராசிரியர் முனைவர் ம. இரகுநாதன் இலங்கை நவீன தமிழ் இலக்கியம் என்ற பொருளிலும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முனைவர் க. குணேஸ்வரன் புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற பொருளிலும் 04 ஆம் திகதி பேராசிரியர் முனைவர் ஸ்ரீ பிரசாந்தன் இலங்கைத் தமிழ் இலக்கியப் பதிப்பு முயற்சிகள் என்ற பொருளிலும் 05 ஆம் திகதி முனைவர் ந.அரங்கராசன் இலங்கையில் தொல்காப்பிய, சங்க இலக்கியக் கற்கை என்ற பொருளிலும் 06 ஆம் திகதி முனைவர் ஜெயலஷ்மி இராசநாயகம் இலங்கையில் மரபுவழித் தமிழ்க்கல்வி என்ற பொருளிலும் 07 ஆம் திகதி முனைவர் த.கலாமணி இலங்கையில் மேலைத்தேயத்தவர் வருகையும் தமிழ்க்கல்வி மாற்றமும் என்ற பொருளிலும் 10 ஆம் திகதி முனைவர் அனுசியா சத்தியசீலன் இலங்கையில் தமிழ்வழிக் கல்வியும் பாடநூல்களும் என்ற பொருளிலும் 11 ஆம் திகதி முனைவர் சுகன்யா அரவிந்தன் – இலங்கைத் தமிழர் இசை மரபு என்ற பொருளிலும் 12 ஆம் திகதி முனைவர் கிருசாந்தி இரவீந்திரா – இலங்கைத் தமிழர் ஆடல் மரபு என்ற பொருளிலும் 13 ஆம் திகதி பேராசிரியர் முனைவர் வ. மகேஸ்வரன் – இலங்கைக் கோயி;ற்கலைகள் என்ற பொருளிலும் 14 ஆம் திகதி முனைவர் சி. மௌனகுரு – இலங்கைத் தமிழர் கூத்து மரபு என்ற பொருளிலும் 17 ஆம் திகதி முனைவர் எஸ்.ஜெய்சங்கர் – இலங்கைத் தமிழர் நாட்டார் கலைகள் என்ற பொருளிலும் 18 அம் திகதி பேராசிரியர் முனைவர் ம.அப்துல்லா ரமீஸ் – இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் என்ற பொருளிலும் 19 ஆம் திகதி முனைவர் எஸ்.இரகுராம் இலங்கைத்தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள் என்ற பொருளிலும் 20 ஆம் திகதி முனைவர் க. இரகுபரன் – இலங்கைத் தமிழ் ஊடகங்களின் மொழிப் பயன்பாடு என்ற பொருளிலும் 21 அம் திகதி பேராசிரியர் முனைவர் அம்மன்கிளி முருகதாஸ் – இலங்கைத் தமிழ்ச் சிற்றிதழ்கள் என்ற பொருளிலும் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
அரைமணி நேரக் கருத்துரை – தொடர்ந்து அரை மணி நேரம் கலந்துரையாடல் என நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்தனர். நிகழ்வுகள் சூம் மென் பொருளில் வாயிலாக இடம்பெறவுள்ளன என்றும் தமிழ்ச்சங்க இணையத் தளத்தில் (www.thamilsangam.org) உள்ள படிவத்தில் பதிவுகளை மேற்கொண்டு இலவசமாகப் பேராளராகப் பங்கேற்றுப் பயன்பெற முடியும் என்றும் தமிழ்ச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.