யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதிவிழா ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.
நிகழ்வில் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன் தமிழ்க்கவிதையில் பாரதியின் புரட்சி என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.
வரவேற்புரையை ந.ஐங்கரனும் நன்றியுரையை தமிழ்ச் சங்கத்தின் உப செயலர் முதுநிலை விரிவுரையாளர் ந.செல்வாம்பிகையும் ஆற்றினர்.
கவிஞர் கலாநிதி ச. முகுந்தன் தலைமையில் “முண்டாசு கவிஞனிடம் முகிழ்த்த கவியடியால் எம்நிலையைச் சொல்லிடுவோம்” என்ற கருப்பொருளில் கவியரங்கம் இடம்பெற்றது. இதில் கவிஞர்களான கு.ரஜீபன், காரை வ. வடிவழகையன், குரும்பையூர் த.ஐங்கரன், அளவையூர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் பாரதியின் அடிகளை வைத்துக் கவிதை படைத்தனர்.
நடன ஆசிரியர் கீதாஞ்சலி சுதர்சனின் ஸ்வஸ்திக் நாட்டியப் பள்ளி மாணவர்கள் வழங்கிய பாரதிபாடல்களாலான நாட்டிய அரங்கம் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.
தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவாக பாடசாலை மாணவரிடையே தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட விவாதப் போட்டிக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது. இதன் போது வெற்றிக் கேடயங்களை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் வழங்கி கௌரவித்தார்.
22 அணிகள் பங்கு கொண்ட விவாதச் சமரில் முதலிடத்தை யாழ். இந்து கல்லூரியும் இரண்டாம் இடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் மூன்றாம் இடத்தை யாழ். மத்திய கல்லூரி மற்றும் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி என்பனவும் கனவான் தன்மை கொண்ட அணிக்கான விருதை – திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.