சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அவர்களின் மறைவு சைவத்தமிழ் உலகிற்குப் பேரிழப்பு – யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அஞ்சலிச் செய்தி

ஈழத்துத் தமிழ் உலகில் ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் கட்டுரையாளராகவும் திகழ்ந்து அரிய பல தொண்டுகளை ஆற்றிய சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அவர்களின் மறைவு சைவத் தமிழ் உலகிற்குப் பேரிழப்பாகும் அமரரின் இழப்புக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் தன்  அஞ்சலிகளை பகிர்ந்து கொள்கின்றது. 
 
“குப்பிளானில் பிறந்த சிவசுப்பிரமணியம் மகாலிங்கம் கணிதத்துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியராக மிளிர்ந்து சைவசமயத்தின் மீது கொண்ட பற்றினால் இந்து நாகரிகத்துறை ஆசிரியராகிப் பின்னர் அத்துறை சார்ந்த விரிவுரையாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். 
 
உரும்பிராய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆகிய நிறுவனங்களில் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு நன்மாணாக்கச் செல்வங்களைப் பெற்றெடுத்தார். அவர்களில் சிலர் அவரது வழியில் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு வருவதுவும் சிறப்பிற்குரியதாகும். 
திருமுறைகளில் குறிப்பாகத் திருமந்திரத்தில் ஆழக்கால்பட்ட சிவத்தமிழ் வித்தகர் அவர்கள் வாழ்வியலோடு திருமந்திரக் கருத்துக்களைப் பரப்புரை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். சமய இலக்கியக் கருத்துக்களை எளிமையுறப் பொதுமக்களிடையே பரப்புரை செய்தார். 
 
அன்னாரின் பிரிவால் துயருறும் அத்தனை உள்ளங்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்கின்றோம்.
 
Bookmark the permalink.

Leave a Reply