வடக்கின் தமிழ்ப்பாட மேம்பாட்டிற்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து யாழ். தமிழ்ச்சங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.
வடக்கு மாகாணத்தின் தமிழ்ப்பாட மேம்பாட்டிற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயன்தரக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பதென வடமாகாணக் கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க முக்கியத்தர்களுக்கும் இடையில் (17.01.2019 புதன்) நடைபெற்ற கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நா.கந்ததாசன், மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கமலராஜன், மாகாணத் தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் வசந்தகுமார் ஆகியோர் கொண்ட குழுவினருக்கும் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், தலைவர் ச.லலீசன், உபதலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி, செயலாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோரைக் கொண்ட குழுவினருக்கும் இடையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
உயர்தரத் தமிழ் ஆசிரியர்களுக்கான வாண்மைத்துவப் பயிற்சி, மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயற்பாடுகள், மாகாணம் தழுவிய தமிழறிவுத் தேர்வு , தமிழாசிரியர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புக்கள் வழங்கல் முதலிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.