மாலை அமர்வு (19.01.2019) சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு தமிழ்ச்சங்க உபதலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சிலப்பதிகார வாழ்த்து என்பவற்றை கோப்பாய் ஆசிரிய கலாசாலை இசைத்துறை மாணவி மு.பிரவீணா வழங்கினார்.
வரவேற்புரையை தமிழ்ச்சங்க உபசெயலர் செல்வஅம்பிகை நந்தகுமாரனும் வாழ்த்துரையை யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் ஆற்றினர்.
தொடர்ந்து பிரபல தமிழக சொற்பொழிவாளர் முத்தமிழரசி முனைவர் சரஸ்வதி இராமநாதன் தலைமையில் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், விரிவுரையாளர்களான கு.பாலசண்முகன், இ.சர்வேஸ்வரா மற்றும் ந. ஐங்கரன், தர்மினி றஜீபன், த.சிந்துஜா ஆகியோர் பங்கு கொண்ட சிலப்பதிகார மேன்மைக்குப் பெரிதும் காரணமாவது காப்பிய அமைப்பா? கவித்துவச் சிறப்பா? என்ற பொருளில் அமைந்த பட்டிமண்டபம் இடம்பெற்றது.
அதனை அடுத்து சிலம்பு கூறும் பதினொரு ஆடல்களைக் காட்சிப்படுத்தும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தாரால் ஆற்றுகை நிகழ்வு நடத்தப்பட்டது.
நிறுவக விரிவுரையாளர் கலாநிதி ஷார்மிளா ரஞ்சித்குமாரின் நெறிப்படுத்தலில் 11 விரிவுரையாளர்களும் 22 மாணவர்களும் இணைந்து பதினொரு வகை ஆடல்களைச் சபையோர் வியக்கும் வகையில் ஆற்றுகை செய்தனர்.
தமிழகத்தில் இருந்து வருகைதந்த பேராளர்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
யாழ் . பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் அருட்செல்வி கிருபைராஜா நன்றியுரை ஆற்றினார். தமிழ்ச்சங்க உறுப்பினர் ஜீவா சஜீவன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.