ஈழத்தின் தனித்துவம் மிக்கபெண் ஆளுமை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்

ஈழத்தின் தனித்துவம் மிக்கபெண் ஆளுமை
பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்
(இன்று 14.10.2018 அகவை 75 இனைக் காண்கிறார்)
முகவுரை
உணர்வாகி உயிராகிவிளங்கும் தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக உழைப்போர் பலர். எம்மண்ணில் பிறந்து எம்முடன் வாழ்ந்து உலகளாவிய தமிழ் வளர்ச்சிக்கெனப் பங்களிக்கும் தமிழ் இணையராகப் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இணையரை அடையாளப்படுத்தமுடியும். இவர்களுள் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் 14.10.2018 இல் அகவை 75 இனைக் காண்பதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
பிறப்பும் ஆளுமைஉருவாக்கமும்
முனைவர் மனோன்மணிசண்முகதாஸ் 14.10.1943 இல் பருத்தித்துறை தும்பளை நெல்லண்டையில் பிறந்தவர். தும்பளை சைவப்பிரகாச வித்தியாலயம், வடமராட்சி மெதடிஸ்த உயர்தரப் பாடசாலை என்பவற்றில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக்கலைக் கற்கையைப் பயின்றவர். பேராசிரியர் க.கைலாசபதியின் வழிகாட்டலில் சி.வை. தாமோதரம்பிள்ளையின் தமிழியற் பணிகளை ஆய்வு செய்து முதுமாணிப் பட்டத்தையும் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வழிகாட்டலில் சங்ககால அகப்பாடல்களின் உரைப்பொருத்தம் குறித்து குறுந்தொகைப் பாடல்களை முன்னிறுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.

பேராதனையில் தனது வாழ்க்கைத் துணைநலத்தைத் தீர்மானிக்கும் நல்லூழ் அவருக்கு வாய்த்திருந்தது. 1965 இல் சண்முகதாஸ் மனோன்மணி இணையரின் திருமணம் இடம்பெற்றது. இணையர் இயற்றிய இல்லறவாழ்வின் இனிய நன்கலங்களாக கலைச்செல்வி குகஸ்ரீ,திருநங்கை ஞானசபேசன், செந்தூரன் ஆகியோர் வாய்த்தனர். கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் இவர்கள் வாழ்கின்றனர். சேந்தினி, இளநிலா, அபிதேவ், தியானா, றிக்கோ, அபிநயனி எனப் பேரப்பிள்ளைகளையும் கண்டுள்ளனர். புலம் பெயர் தேசத்தில் வாழும் தகைமையும் வசதியும் இருந்தும் யாழ். மண்ணில் தம் ஊழியைக் கழிக்கும் ஆர்வத்தினால் இன்றும் யாழ்ப்பாணத்தில் வாழ்வதைப் பெருமையாகக் கருதி இத்தமிழ் இணையர் வாழ்கின்றனர்.

ஆசிரியப் பணி
பேராசிரியரதும் அம்மையாரதும் தமிழாசிரியப் பணிகள் போற்றுதற்குரியன. யாழ்ப்பாணக் கல்லூரிப் பட்டதாரிப் பிரிவின் தமிழ்த்துறை விரிவுரையாளர்களாக இருவரும் 1965 தொடக்கம் மூன்றாண்டுகள்; பணியாற்றியுள்ளனர். பேராசிரியர் சண்முகதாஸ் பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனத் தனது பணிகளை விரித்துக்கொண்டார். முனைவர் மனோன்மணி அம்மையார் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தின் தமிழாசிரியராகவும் நான்குஆண்டுகள் கொக்குவில் தொழினுட்ப நிறுவனத்தின் விரிவுரையாளராகவும் இருபதாண்டுகள் யப்பான் தொக்கியோவில் உள்ள கக்சுயின் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பேராசிரியராகவும் பணியாற்றி பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் வருகை விரிவுரையாளராகவும் வெளிவாரிப் பட்டக்கற்கை நெறியில் தமிழ்; பயில்வோருக்கான வழிகாட்டுநராகவும்; பணிமேற்கொண்டார்.

சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை ஆழந்த புலமையும் பயிற்சியும் அம்மையாரிடத்தில் உண்டு. இதனால் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழில் உயர்பட்டப் படிப்பைமேற்கொள்ளும் பலரைஇன்றும் வழிப்படுத்திவருகின்றார்.

செவிலித்தாய்
திருநெல்வேலி சைவச்சிறுவர் இல்லப் பிள்ளைகளின் செவிலித்தாயாகத் தன்னைஅர்ப்பணித்தார். 14 ஆண்டுகள் சைவவித்தியா விருத்திச் சங்கத்தில் இல்லத்திட்டப்பணிப்பாளராகவும் நிதிச் செயலாளராகவும் பணியாற்றி சிறுவர்களை வழிப்படுத்தினார். இவர்களுட் பலர் வாழ்வின் உயர்நிலையில் மிளிர்வதற்கு வழிகாட்டியாகவும் ஒளியேற்றியாகவும் அமைந்தார்.

அம்மையார் ஆக்கிய நூல்கள்
அம்மையார் இதுவரை 52 நூல்களைஆக்கியுள்ளார். இவை தமிழ், ஆங்கிலம், மற்றும் யப்பானிய மொழிகளில் அமைந்தனவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியபோக்குகள்., சி.வை.தா. ஓர் ஆய்வு, இத்திமரத்தாள், ஆற்றங்கரையான், றுழசடனஎநைற யனெ சுவைரயடள யுஅழபெ துயியநௌந யனெ வுயஅடைள, மன்யோசு காதற் பாடற் காட்சிகள், மன்யோசு, காதற் காட்சிகள், சாதியும் துடக்கும், பைந்தமிழர் வாழிவியற் கோலங்கள், தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, சங்ககாலத் திருமணநடைமுறைகள்,சென்றகாலத்தின் பழுதிலாத்திறம்,காலம் தந்த கைவிளக்கு, வாலிவதை–ஒருவழக்காடுகளம், செவிநுகர் கனிகள், பாரதியின் கன்னிக் குயிலின் இன்னிசைப் பாட்டு, இலங்கைத் தமிழியல் – சிலபதிவுகள், பிஞ்சுமுகத்தின் தேடல், ஜப்பானியக் காதற் பாடல்கள் முதலிய நூல்கள் இங்கு குறிப்பிட்டுக்காட்டத்தக்கன. நூல்களின் பட்டியல் இதைவிடநீண்டது. இடவிரிவஞ்சித் தவிர்க்கப்பட்டுள்ளன. தவிர, நூற்றுக்கணக்கானஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்

அம்மையாரின் ஆக்க இலக்கியங்கள்
ஆக்க இலக்கியகர்த்தராகவும் மனோன்மணிஅம்மையார் தன்னை இனங்காட்டியுள்ளார். ஐந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களும் இசைச்சித்திரங்களும் இவற்றுள் அடங்கும். சொர்க்கத்தின் குரல், அம்மாவந்தாள் ,நம்பிக்கை, புத்தம் புதியதுளிர், பொதுக்கிணறு முதலிய சிறுகதைகள் பிரபலஊடகங்கள் வாயிலாகப் பிரசுரமாகியுள்ளன. இதைவிட வலம்புரி, உதயன், ஜேர்மனியின் வெற்றிமணி, இந்துசாதனம் முதலிய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக இலக்கியமற்றும் சமயச் செய்திகளின் பத்தியெழுத்தாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.

சிறந்தகுரல் ஆளுமையுடன் கருத்துக்களைவெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதால் இன்றையயாழ்ப்பாணத்துப் பெண் பேச்சாளர்கள் வரிசையில் முதன்மையிடத்தில் வைத்தெண்ணப்படும் ஆளுமையாகத் திகழ்கின்றார்.

தனித்துவச் சிந்தனைகள்
இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பைப் பல்வேறு அறிஞர்களும் வௌ;வேறு வகைகளில் குறிப்பர். அது அவர்களுக்கு உள்ள சுதந்திரம். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்புக் குறித்துக் கட்டுரை ஆக்கிய முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் தனது நோக்கில் புதியதோர் அணுகுமுறையைப் பதிவு செய்கின்றார்.
‘ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றுப் பரப்பினைப் பார்க்குமிடத்து 12 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரேயே தமிழில் இலக்கியங்கள் பற்றிய செய்திகளை அறிய முடிகின்றது. இப்பிற்பட்ட காலப்பகுதியைப் பாகுபாடு செய்யுமிடத்து பின்வருமாறு பாகுபாடு செய்துகொள்ளலாம்’ என்கிறார் (இலங்கைத் தமிழியல் சில பதிவுகள் ப.07)
அ. ஆறுமுகநாவலருக்கு முற்பட்ட காலம் (1216 – 1822)
ஆ. ஆறுமுகநாவலர் காலம் (1872 – 1879)
இ. தன்னாட்டு உணர்வுக் காலம் (கனகிபுராணம் போன்ற இலக்கியங்கள் எழுந்த காலம்)
ஈ. தனித்துவம் பேணும் காலம். (1958 இற்குப் பின் – இனக்கலவரத்தின் பின்னரான காலம்)

முதலாவது பகுதியில் ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் தொடக்கம் ஆறுமுகநாவலர் வரையான காலப்பகுதியைக் குறிப்பிடுகின்றார். இதற்குள்தான் மிசனறிகளின் காலமும் அடங்குகின்றது. இக்காலப்பகுப்பு ஆறுமுகநாவலர் என்ற தனி ஆளுமையை மையப்படுத்தி அமைக்கப்பட்டமை, மற்றும் தனித்துவம் பேணும் காலம் என்ற தொடர்ப்பிரயோகம் என்பன தமிழுலகோரால் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது ஆய்விற்குரியது.

யாழ்ப்பாணத்தவரின் வழிபாட்டு மரபுப் போக்குப் பற்றி அவர் குறிப்பிட்ட கருத்து ஒன்று நோக்கத்தக்கதாகும்.
‘யாழ்ப்பாணத்தவர்கள் கிறிஸ்தவ மதத்தையும் மேலைநாட்டுப் பண்பாட்டம்சங்களையும் எதிர்கொண்டபோது அதன் செல்வாக்கைத் தடுப்பதற்கு ஆரியவயப்பட்ட மதவழிபாட்டு நடைமுறைகளையே தமது கவசமாக அணிய முற்பட்டனர். இதனால் தொழில்நிலை சார்ந்த நிலத்தெய்வ வழிபாட்டு நடைமுறைகள் வழக்கொழியலாயின. சாதிநிலை வழிபாடுகளாக அவை சமூகக்கட்டமைப்பை அவிழ்க்க முயன்றன.’ (இலங்கைத் தமிழியல் சில பதிவுகள் ப. 137) பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் நாடக உலகப் பிரவேசம் குறித்துக்கருத்துரைக்கும் போது அம்மையார் மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார்.

அம்மையாருடைய எழுத்துநடை சிக்கனம் வாய்ந்ததாக இருக்கும். வெல்லும் சொல் இன்மை அறிந்து அவரது சொற்பிரயோகம் இருப்பதை ஆக்கங்களை வாசித்தவர்கள் அறிவர். கட்டுரைகளில் மேலைத்தேயப் பாணியில் அட்டவணைகளாக்கிக் காட்டுதல், வகைப்படுத்திக் காட்டுதல், குறித்த ஒரு கருத்து எவ்வௌ; இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது என்பதை நிரற்படுத்திக் காட்டுதல் என அவரது எழுத்துநடையில் ஒரு தனித்துவம் உள்ளது.

விஞ்ஞானத்தின் வலிமை மிகு செயற்பாடுகள் பற்றிய நம்பிக்கை அவரிடம் குறைவாகவே காணப்படுகின்றது. மின்னஞ்சல், முகப்புத்தகம் முதலிய தொடர்பாடல் சாதனங்களின்பால் நம்பிக்கையற்றவராக அவரைப் பலதடவைகள் தரிசித்திருக்கின்றேன். அவரது கையெழுத்தை ஒரு தனி எழுத்துருவாக (கழவெ) அமைக்கலாம் எனப் பலரும் விதந்து பேசுவர்.
இளையோரிடையே இலக்கியப் பரிச்சயத்தை வளர்க்கவேண்டும் என்ற ஆர்வமும் அதற்கான செயலுருக்களும் அவரிடம் என்றைக்கும் இருந்து வருகின்றது. இதற்கு அவரது பின்வரும் கருத்துச் சான்றாக அமையும்.
‘இன்றைய வேகமான வாழ்வியலில் சமூகவயப்பட்ட வழிகாட்டல் ஒன்று தேவைப்படுகின்றது. வாழ்வின் செல்நெறியைச் செம்மைப்படுத்த இலக்கியக் கற்கை நெறி ஒன்று இன்றியமையாதது. இளமையும் முதுமையும் ஒன்றுபட இது வழிவகுக்கும். ஆனால் இக்கற்கை நெறியைக் கல்விக் கூடங்கள் மட்டும் நிறைவாகச் செய்ய முடியாது. பொது அமைப்புக்களும் இப்பணியைத் தலைமேற்கொள்ள வேண்டும். ஊரக நிலையில் இலக்கியத்தின் சுவையை ஊட்டி மக்களை அதன்பால் ஈர்க்கும் பணியை இளைஞரும் முன்னெடுக்க வேண்டிய காலம் இது. முதுமை, தளர்ச்சியாலும் முரண்பாட்டாலும் இப்பணியைக் கைநெகிழ விட்டுள்ளது. அதனால் சமூக நெறிப்படுத்தலில் ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பிறமொழிச் செல்வாக்கும் பிறபண்பாட்டுத் தாக்கமும் சமூகக் கட்டமைப்பைச் சீர்குலைத்துள்ளன. இந்நிலையில் ஆரியர் ஆடும் கயிற்று நடனம் போலப் பணிசெய்ய இளந்தலைமுறை முன்வரவேண்டும்.’ (ஜீவநதி – 01. ப.05)

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்குமீளுயிர்ப்பு
யாழ்ப்பாணஅரசர் காலத்தில் நல்லூரில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் ஒன்றுசெயற்பட்டதாகவரலாறுஉண்டு. 1900 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இதற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டுசெயற்படுத்தப்பட்டதாயினும் சிலஆண்டுகளில் இதன் பணிகள் கைவிடப்பட்டுவிட்டன. உலகிலேயே தமிழ்ச்சங்கம் கால்கோளிடப்பட்ட யாழ்ப்பாணத்திற்கெனத் தமிழ்ச்சங்கம் இல்லையே என்ற பெருங்குறையைக் களையும் வகையில் 2012 ஆம் ஆண்டில் துறைசார்ந்தோரை இணைத்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தை பேராசிரியா அ.சண்முகதாஸ் மீளஉருவாக்கினார்;. அவரேஅதன் முதலாவது தலைவராகவும் செயற்பட்டார். தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் கலாநிதி மனோன்மணி அம்மையார் மூன்றாவது தலைவராக 2016 தொடக்கம் தலைமைப் பொறுப்பை ஏற்று இரண்டாண்டுகள் சங்கத்தை வழிநடத்தினார்.

நிறைவாக…
பெண்மையின் ஆற்றலைப் பெரிதும் வலியுறுத்தக்கூடிய ஆளுமை மிக்கவராக முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களை அடையாளப்படுத்தலாம். பேராசிரியர் அ.சண்முகதாஸ் என்ற மிகப்பெரும் ஆளுமையின் வெற்றிகளுக்குப் பின்னால் நின்று இயங்குவதோடல்லாமல் தனித்துத் தன் தடத்தையும் நிலைநிறுத்தும் மனோன்மணி அம்மையாரின் வாழ்வியல் – இன்றைய உலகோர் கற்க வேண்டிய பாடம். அவருக்கு இனிய பவளவிழா வாழ்த்துக்கள்.

ச.லலீசன்
தலைவர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்.

Bookmark the permalink.

Leave a Reply