யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியத்துணைத் தூதர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தொடக்கவுரையாற்றினார்.
கரவெட்டியூர் ரகுநாதன் அகரன் என்ற நான்கு வயதுச் சிறுவன் பாரதி குறித்து உரையாற்றிச் சபையோரை வியப்பில் ஆழ்த்தினான்.
தமிழ்ச்சங்கத்தின் மரபுக் கவிதைப் பயிலரங்க மாணவர்கள் புயலாய் புதுப்புனலாய் என்ற பொருளில் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் கவியரங்கில் பங்கேற்றனர். அத்துடன் தமிழ்ச்சங்க இசைக்குழுவினர் பாரதி பாடல்களைக் கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
மரபுக் கவிதை பயிலரங்கில் வளவாளர்களாக கலந்து கொண்ட கவிஞர் சோ.ப. கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் பயிலரங்கில் சித்திபெற்றோர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை மாணவர்களிடையே தமிழ்ச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை வெற்றிக்கிண்ணத்திற்கான விவாதச் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் முதற்பரிசை யாழ்.இந்துக் கல்லூரியின் விவாத அணியும் இரண்டாவது பரிசை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் விவாத அணியும் பெற்றுக்கொண்டன. நிகழ்வுகளை தமிழ்ச்சங்கச் செயலர் இ.சர்வேஸ்வரா தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினர்களான சாந்தினி அருளானந்தம் வரவேற்புரையையும் ந.ஐங்கரன் நன்றியுரையையும் ஆற்றினர்.
(நிகழ்வின் காணொலியை Capital FM வானொலியின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்)
– படங்கள் நன்றி ஐ. சிவசாந்தன்