சிறப்புற இடம்பெற்ற யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணனும் இணைந்து முன்னெடுத்த நாவலர் விழா 24.12.2016 சனிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைவணக்கத்தை கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் வாசஸ்பதி ரஜீந்திரன் இசைத்தார். நாவலர் வணக்கச் சுடரை வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் ஏற்றினார்.  வரவேற்புரையை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் வேல். நந்தகுமாரும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் ஆற்றினர்.
நாவலரின் தொலைநோக்கு என்ற பொருளில் ஆய்வரங்கம் இடம்பெற்றது.  ஓய்வுபெற்ற பேராசிரியர் கலைவாணி இராமநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கில் நாவலரின் தொலைநோக்கில் சமயம் என்ற பொருளில் இந்துநாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசனும் நாவலரின் தொலைநோக்கில் கல்வி என்ற பொருளில் இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சி.ரமணராஜாவும் நாவலரின் தொலைநோக்கில் மொழி என்ற பொருளில் இந்நுநாகரிகத்துறை விரிவுரையாளர் தி.செல்வமனோகரனும் நாவலரின் தொலைநோக்கில் பண்பாடு என்ற பொருளில் இந்து நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரனும் நாவலரின் தொலைநோக்கில் சமூகம் என்ற பொருளில் சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ச.ஸ்ரீகாந்தும் ஆய்வுரைகளை ஆற்றினர். ஓய்வுபெற்ற விரிவுரையாளர் நாச்சியார் செல்வநாயகம் ஆய்வரங்கிற்கான தொகுப்புரையை ஆற்றினார்.
ஆய்வுரைகளின் தொகுப்பான நாவலரின் தொலைநோக்கு என்ற நூலினை வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை சைவமகாசபையின் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப. நந்தகுமார் பெற்றுக்கொண்டார்.  தொடர்ந்து 30 பாடசாலைகளுக்கு மென்சீமெந்தில் அமைக்கப்பட்ட நாவலரின் திருவுருவச்சிலை வழங்கப்பட்டது. இந்தியத்துணைத் தூதர் ஆ.நடராஜன் வாழ்த்துரையாற்றி சிலைகளை வழங்கினார். நாவலரின் குடும்பத் தோன்றல்களான இரண்டு கொள்ளுபேரர்மாருக்கு நாவலர் சிலை வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
நிறைவு நிகழ்வாக கலாஷேத்திராவின் நடன டிப்ளோமாதாரியாகிய ஷாலினி வாகீஸ்வரசர்மாவின் பரத நாட்டிய ஆற்றுகை இடம்பெற்றது. நிகழ்வின் நிறைவில் சமுர்த்தி உத்தியோகத்தர் ச.கருணாகரன் நன்றியுரை ஆற்றினார்.
Bookmark the permalink.

Leave a Reply