யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்களின் தமிழியல்சார் அறிவை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்தொடர் வரிசையில் கடந்த 19.02.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வீரமாமுனிவர் விழாவைச் சிறப்புற முன்னெடுத்தது.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதன் அதிபரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர்களுள் ஒருவருமாகிய அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வீரமாமுனிவரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் என்ற பொருளில் மன்னார் கலையருவி நிறுவன இயக்குநர் அருட்பணி தமிழ்நேசன் அடிகள் சிறப்புரை ஆற்றினார். தமிழ் மொழியில் ஆற்றல் பெறுவதற்குப் பெரிதும் துணை செய்வது எது? என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் தலைமையில் சொல்லாடுகளம் இடம்பெற்றது.
புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களைப் பேச்சாளர்களாகக் கொண்ட இச்சொல்லாடுகளத்தில் எழுத்துப் பயிற்சியே என த.ரகுராம், ந. சஞ்சீவன் ஆகியோரும், கேள்விப் பயிற்சியே என பா.டிலக்ஷன், எஸ். ஜோன் எமில்ரன்; ஆகியோரும், வாசிப்புப் பயிற்சியே என ம.சேவியர், ஜெ.நிக்லஸ் ஷர்வியோ ஆகியோரும் வாதிட்டனர். புனித பத்திரிசியார் கல்லூரி தமிழாசிரியர் இ.இ. வசீகரன் நன்றியுரையாற்றினார்.