யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்களின் தமிழியல்சார் அறிவை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்தொடர் வரிசையில் எதிர்வரும் 19.02.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வீரமாமுனிவர் விழா இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதன் அதிபரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர்களுள் ஒருவருமாகிய அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் வீரமாமுனிவரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் என்ற பொருளில் மன்னார் கலையருவி நிறுவன இயக்குநர் அருட்பணி தமிழ்நேசன் அடிகள் சிறப்புரை ஆற்றுவார்.
தமிழ் மொழியில் ஆற்றல் பெறுவதற்குப் பெரிதும் துணை செய்வது எது? என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் தலைமையில் சொல்லாடுகளம் இடம்பெறும். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களைப் பேச்சாளர்களாகக் கொண்ட இச்சொல்லாடுகளத்தில் எழுத்துப் பயிற்சியே என த.ரகுராம், ந. சஞ்சீவன் ஆகியோரும், கேள்விப் பயிற்சியே என பா.டிலக்ஷன், சி. மரின் றொமன்சன் ஆகியோரும், வாசிப்புப் பயிற்சியே என ம.சேவியர், ஜெ.நிக்லஸ் ஷர்வியோ ஆகியோரும் வாதிடவுள்ளனர். புனித பத்திரிசியார் கல்லூரி தமிழாசிரியர் இ.இ. வசீகரன் நன்றியுரையாற்றுவார்.
இந்நிகழ்வு இளையோரை வளப்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்டாலும் ஆர்வலர் எவரும் நிகழ்வில் பங்கேற்றுப் பயன் பெறலாம் எனத் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வீரமாமுனிவரின் நினைவு நாள் பெப்பரவரி 4 ஆம் திகதியாகும். இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர்.1742 இல் இறந்தார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பிரதான நோக்குடன் இயேசு சபைக் குருவாக 1710 இல் தமிழ் நாட்டிற்குச் சென்றார். இவரது இயற்பெயர் கொன்ஸ்ரன்ரைன் யோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi ) என்பதாகும். மறை பரப்பும் முயற்சிக்காகத் தமிழ் கற்ற அவர் தமிழ் மேல் கொண்ட காதலால் தனது பெயரை வீரமாமுனிவர் என அமைத்துக் கொண்டார். பல தமிழ் நூல்களை ஆக்கினார். திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
தேம்பாவணி என்ற காப்பியம், சதுரகராதி என்ற அகராதி நூல் தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூல் பரமார்த்த குரு கதை என்ற கதை நூல் முதலியவை இவரது படைப்புக்களில் பிரபலம் பெற்றவை ஆகும்.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை மேற்கொண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். மெய் எழுத்துக்களுக்கு புள்ளி வைத்து (மேலே குற்றுப் போட்டு) எழுதும் முறைமையையும் தமிழில் குறில் நெடில் வேறுபாட்டிற்கு ஏற்ப எழுதும் புதிய முறைமையையும் ஏற்படுத்தியவர் இவரேயாவார்.