தமிழுக்குத் தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை
– கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதனின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் அனுதாபம்.
கொழும்புத் தமிழச்சங்கத் தலைவர் முத்தையா கதிர்காமநாதன் தனது 72 ஆவது வயதில் காலமானார். என்பது வேதனையைத் தருகின்ற செய்தியாக அமைந்துள்ளது. மக்கள் சேவையே தெய்வீகத் திருப்பணி என வாழ்ந்த இவர் அகில இலங்கை இந்து மாமன்றச் செயலாளராகவும் முன்னணி சமூகத் தொண்டு அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார்.
நயினாதீவு மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவர். தொழிலதிபராக விளங்கி சமூகப் பணிகளே வாழ்வில் மனநிறைவைத் தரும் என உணர்ந்து அதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழத்தலைப்பட்டார். முழுநேரத் தமிழ்த்தொண்டனாகத் தன்னை ஆக்கிக் கொண்டார்.
தமிழியல் சார்ந்த இளையோரை வளர்ப்பதிலும் உலகளாவிய நிலையில் உள்ள தமிழ்ச்சங்கங்களுடன் உறவுகளைப் பேணுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக மூன்று தடவைகள் பதவி வகித்து அரிய தமிழ்த் தொண்டுகளை ஆற்றியுள்ளார். தமிழியல் சார்ந்து திருக்குறள் மாநாடு, உலகத் தமிழிலக்கிய மாநாடு எனப் பல நிகழ்வுகளை முன்னெடுத்த பெருமை அவரைச் சாரும்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை என்ற பாரதிதாசனின் வாக்கு இவருடனும் பொருத்திப் பார்க்கத்தக்கது.
அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினருக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினரின் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.