பாடசாலை மட்டத்தில் இளையோரைத் தமிழ்த்துறையில் ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் பாடசாலை மட்ட விழாக்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் முதல் நிகழ்வு யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சி.வை. தாமோதரம்பிள்ளை விழாவாக இடம்பெற்றது.
.
29.01.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமை தாங்கினார்.
சிறுப்பிட்டியில் உள்ள சி.வை.தா. நினைவு மன்றத்தின் பொருளாளரும் முன்னாள் வங்கியாளருமாகிய தி.செந்திநாதன் மங்கல விளக்கேற்றினார். யாழ். இந்து மகளிர் கல்லூரி அதிபர் மிமிலாதேவி விமலநாதன் தொடக்கவுரையாற்றினார். செம்மொழி இலக்கியத்தின் திறவுகோல் என்ற பொருளில் சிறப்புரையை முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்தினார்.
.
தொடர்ந்து யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்தும் நிகழ்வாக சொல்லாடுகளம் என்ற நிகழ்ச்சி இடம்பெற்றது. “இன்று இளைய தலைமுறையை நெறிப்படுத்துவதில் பெரும் பங்கை ஆற்றுபவர் யார் என்ற பொருளில் நடைபெற்ற இச்சொல்லாடுகளத்தில் முதியோரே? என அனுரா செல்வராசா, மிதிலா குணபாலசிங்கம் ஆகியோரும் பெற்றோரே என மதிவதனி குருச்சந்திரநாதன், புவிநிலா உதயகுமார் ஆகியோரும் ஆசிரியரே என பவதாரணி மோகன், தட்சாயனி சுந்தரமூர்த்தி ஆகியோரும் பங்குகொண்டனர். தமிழ்ச்சங்கச் செயலாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் நடுவராகச் செயற்பட்டார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ந. ஐங்கரன் நன்றியுரை நல்கினார்.
பாடசாலை மட்டத்தில் தமிழியல் சார்ந்த பயிலரங்குகளை முன்னெடுப்பதற்குத் (கவிதை, சிறுகதை…) தமிழ்ச்சங்கம் தயாராக இருக்கின்றது என்றும் தமிழ்ச்சங்கத்தின் புலமைசார் வளவாளர் குழு மூலம் இதனை முன்னெடுக்க விரும்பின் தமிழ்ச்சங்கத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.