யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதி விழா கடந்த சனிக்கிழமை (10.10.2015) துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிருபாலேணர்ஸ் நிறுவனத் தொழிலதிபர் கிருபாகரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் வடிவாம்பிகை சுபதாஸ் தமிழ் வாழ்த்திசைத்தார்.
தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசன் வரவேற்புரையாற்றினார். இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் தொடக்கவுரையாற்றினார். முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கோகிலா மகேந்திரன் ‘பாரதி கண்ட அதியுயர் மானுடன்’ என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.
யாழ். முன்னணிக் கலைஞர்கள் இணைந்து வழங்கிய எட்டயபுரத்து ஏழிசை என்ற நிகழ்வு கேட்டார்ப் பிணிக்கும்; இசை நிகழ்வாக இடம்பெற்றது. இதில் அளவெட்டிக் கும்பிளாவளைப் பிள்ளையார் கோவில் பிரதம குரு வண. சோம.குமாரதாசக் குருக்கள், நல்லை முருகப் பெருமான் ஆலய அர்ச்சகர் வண. விஸ்வ. பிரசன்னக் குருக்கள், யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் ஹம்சத்வனி பிரசாந்த சர்மா, திட்டமிடல் பட்டதாரி உத்தியோகத்தர் ம.தயாபரன், தெ.பானுகா, வண. கு. விஸ்வசுந்தர், நாதஸ்வர வித்துவான் ர.சுரசாகித்தியன், ர.கிருசிகன் ஆகியோர் தம் குரல்வண்ணத்தைக் காட்டினர்.
அணிசேர் கலைஞர்களாக கீபோர்ட் – சிவ.ரஜீவன், தபேலா- சு.ஜெனில்சங்கர், புல்லாங்குழல் – க.தேசிகன், தபேலா – ப.சியாம்கிருஷ்ணா, மிருதங்கம் – எஸ். நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். பாரதியின் பக்திப் பாடல்களில் தொடங்கி என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற உணர்வுப் பாடலோடு எட்டயபுரத்து ஏழிசை சிறப்புற நிறைவுற்றது.
பெண்கள் சார்ந்த எழுச்சி நிலையை மையப்படுத்தியதாக உதயகன்னி என்ற நாட்டிய நாடகம் இடம்பெற்றது. நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா நடனப்பள்ளியின் மாணவர்கள் இந்நாட்டிய நாடகத்தைச் சிறப்புற வழங்கினர். சமூகப் போக்கில் இன்று அச்சுறுத்தலைச் சந்திக்கும் பிரதான பாத்திரமாகப் பெண்ணே விளங்குகின்றாள். புதுமைப் பெண்ணாக அவள் பொங்கியெழும் பட்சத்திலேயே சமூக விடுதலை சாத்தியப்படும்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம். அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்.; இதுவே உதய கன்னி உரைப்பது என நாட்டிய நாடகம் நிறைவுற்றது.
நாட்டிய நாடகத்தின் நட்டுவாங்கத்தை யாழ். பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் சத்தியப்பிரியா கஜேந்திரன் மேற்கொண்டார். பாட்டு – அகிலேசன் அமிர்தசிந்துஜன், அகிலேசன் அமிர்தலோஜனன், மிருதங்கம் – யாழ். பல்கலைக்கழக மிருதங்க விரிவுரையாளர் நல்லை க. கண்ணதாசன், வயலின் – விரிவுரையாளர் கா.குகபரன், கீபோர்ட் – சி.ரஜீவன் ஆகியோர் பங்கேற்றனர்.
நீர்வேலியையும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களையும் சேர்ந்த நாட்டியம் பயிலும் மாணவர்களே நாட்டிய நாடகத்தில் பங்கேற்றிருந்தனர். அவர்கள் வெளிப்படுத்திய நாட்டிய பாவங்கள் காண்போரை மகிழ்வடையச் செய்ததோடு கிராமப் பிள்ளைகளின் ஆற்றலை வியந்து நோக்குவதாகவும் அமைந்தன.
பாரதிக்கு விழா என்பது தமிழுக்கான விழாவாகும். ஒரு வகையில் தமிழ் எழுச்சி சமூக எழுச்சியாகவும் பரிணமிக்க வேண்டும். இத்தகைய எழுச்சிகளுக்கான ஓர் உணர்வைக் கொடுத்த விழாவாகப் பாரதி விழா அமைந்திருந்தது.