தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் நிகழ்வுகள்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய சங்கப்பேழை நூல்வெளியீடு, உலகத் தாய்மொழிநாள் பேருரை மற்றும் 2019 உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் அதிவிசேட சித்தி பெற்ற வடமாகாண மாணவர்கள் 154 பேருக்கான மதிப்பளிப்பு ஆகிய மூன்று நிகழ்வுகள் கடந்த 19.03.2022 சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றன. தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா கலந்து கொண்டார். நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் தமிழ்மொழிநாள் பேருரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரமும் அவருக்கான அறிமுகவுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் சங்கப்பேழை நூல் வெளியீட்டுரையை நூலின் பதிப்பாசிரியர் லோ. துசிகரனும் நூலாய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரனும் ஆற்றினர். நன்றியுரையை சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் கு. பாலசண்முகனும் நிகழ்ச்சி முன்னிலைப்படுத்தலை சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வராவும் மேற்கொண்டனர். சங்கப்பேழை நூலை தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வெளியிட்டு வைக்க அதன் முதற்பிரதியை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாகாண மற்றும் வலயங்களின் தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் தமிழாசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். கௌரவம் பெற்ற மாணவர்களுக்கு ஐயாயிரம் ரூபா பணப்பரிசில், ஐந்து பெறுமதியான புத்தகங்கள் அடங்கிய பொதி மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்பட்டன. மேலும் வாசிக்க